"பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர்களை இணைத்துக் கொள்ளுதல் விவகாரம்"
கடந்த அரசாங்கத்தின் போது பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு தொடர்ந்தும் நீடிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதன் படி இந்த இடைக்கால உத்தரவு 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி இடம்பெறவிருந்த ஆசிரிய உதவியாளர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள், நீதிமன்ற தடை உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து உடனடியாக பரிசீலிக்கப்பட்டு ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் தடை உத்தரவுக்கான மனு வாபஸ் பெறப்படும் என மலையக அரசியல்வாதிகள் தெரிவித்திருந்தாலும் ஜனாதிபதி தேர்தல் காலமாகையால் அவர்களுக்கு அது குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரமிருக்கவில்லை.
தற்பொழுது இழுபறி நிலையில் உதவி ஆசிரியர் நியமன விவகாரம் உள்ளது.. ஆட்சி மாற்றம் நடந்து உள்ள நிலையில் புதிய அரசாங்கம் இது தொடர்பில் எந்த ஒரு அறிவித்தலும் வெளியிடவில்லை பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர் நியமன விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அந்த விடயத்தில் அமைச்சரவைக்குத் தலையிட முடியாது. எனவே நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடையும் வரை காத்திருக்க வேண்டும்.
எவ்வாறாயினும், தொழில் ரீதியாக தொண்டர் ஆசிரியராக பணியாற்றும் தாம், உதவி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிப்பதாகவும், இலங்கை ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு முரணாக இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்தார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி