முத்துபந்திய கடற்கரையில் சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (24) மாலை சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் பிரசவித்தின் பின்னர் குழந்தை இல்லாத நிலையில் கவலைக்கிடமாக காணப்பட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சிலாபம் - தெதுரோய நீர் தாங்கி கிராமத்தைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குழந்தை பிறக்கவுள்ளதாகவும், பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்வதாகவும் கூறி வீட்டை விட்டு வெளியேறிய குறித்த பெண் பின்னர் மீண்டும் தனியாக திரும்பியுள்ளதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைய சந்தேக நபரான பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமணமாகாத குறித்த பெண் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள போதும் அதில் எந்தவொரு குழந்தையும் அவருடன் வாழவில்லை என்பதும் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
எனினும், இம்முறை தனக்குப் பிறந்த குழந்தை தொடர்பில் அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிசுவின் சடலம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பிரசவித்த குழந்தை காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான சமர்ப்பணங்களை சிலாபம் நீதவானிடம் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி