நுவரெலியா மாவட்டத்தில் அடை மழையுடன் கடும் பனி மூட்டம் காணப்படுவதனால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையினை தொடர்ந்து மத்திய மலைநாட்டில் பல பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழையுடனான வானிலை நிலவி வந்தது.
இந்நிலையில் இன்று ஒரு சில பிரதேசங்களுக்கு காலை வேளை சீரான வானிலை காணப்பட்டதுடன் பகல் வேளையில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
மழையுடன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் பிட்டவல, கினிகத்தேனை, தியகல, வட்டவளை, ரொசல்ல, ஹட்டன் உள்ளிட்ட பிரதேசங்களிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாகம, கொட்டகலை, சென்கிளையார், தலவாக்கலை, லிந்துலை, சமர்செட், நானுஓயா ரதல்ல உள்ளிட்ட பிரதேசங்களில் கடும் பனிமூட்டம் அடிக்கடி காணப்படுவதனால் இந்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக செலுத்துமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
பனிமூட்டம் காணப்படும் பிரதேசங்களில் பயணிக்கும் போது தமக்குரிய பக்கத்தில் வாகனத்தின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு பயணிப்பதன் மூலம் வாகன விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளலாம் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பனிமூட்டம் காரணமாக ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகள் உள்ளிட்ட பல வீதிகளில் வாகன போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி